Home / செய்திகள் / இலங்கை / தூய ஆட்சி என்ற வெற்று கோஷத்­தைக் கைவிட்டு

தூய ஆட்சி என்ற வெற்று கோஷத்­தைக் கைவிட்டு

2015ஆம் ஆண்டு நடை­பெற்ற அரச தலை­வர் தேர்­த­லில் ‘நல்­லாட்சி’ என்ற கோஷத்­தின் மூலம் வெற்­றி ­பெற்று ஆட்­சிப்­பீ­டம் ஏறி­யி­ருந்­தார் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன. சுதந்­தி­ரக் கட்­சி­யின் தலை­வர் என்ற அடிப்­ப­டை­யில் அவர் தற்­போது ‘தூய ஆட்சி’ என்ற கோஷத்­தைக் கையில் எடுத்­துள்­ளார்.

இலங்­கை­யில் மலிந்து கிடக்­கும் ஊழல் மோச­டி­கள் மட்­டில் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சிக்கு எவ்­வித தொடர்­பும் கிடை­யாது. தமது கரங்­கள் அப்­ப­ளுக்­கற்­றவை என்­பதை மேடைக்­கு­மேடை பறை­சாற்றி வரு­கி­றார் அரச தலை­வர்.

தெற்­கில் மக்­க­ளின் ஆத­ரவு அலை­யுள்ள மூன்று கட்­சி­களை வரி­சைப்­ப­டுத்­தி­னால் தலைமை அமைச்­சர் ரணில் தலை­மை­யி­லான ஐக்­கிய தேசி­யக் கட்சி, அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி, முன்­னாள் அரச தலை­வர் மகிந்த தலை­மை­யி­லான சிறி­லங்கா பொது மக்­கள் முன்­னணி ஆகி­ய­வை­யாக அவை அமை­யும்.

பிணை­முறி மோசடி விட­யத்­தில் ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்கு மிக­நெ­ருக்­க­மான தொடர்பு உள்­ளது என்று ஏற்­க­னவே அறி­யக்­கி­டைத்­துள்­ளது. முன்­னாள் அரச தலை­வர் மகிந்த காலத்­தி­லும் ஊழல் மோச­டி­கள் இடம்­பெற்­ற­னவா என்­ப­தற்­கும் தெட்­டத்­தெ­ளி­வான பதிலை மக்­கள் கொண்­டுள்­ள­னர்.

ஆக, இந்த இரு கட்­சி­க­ளும் தொடர்­பு­பட்­டுள்ள ஊழல் மோச­டிக் குற்­றச்­சாட்­டுக்­களை தனக்­குச் சாத­க­மாக நன்­றா­கவே பயன்­ப­டுத்தி வரு­கி­றது சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி.

அதன் தலை­வர் என்ற வகை­யில் மைத்­தி­ரி­யும் தனது கட்சி வெற்­றி­பெ­று­வ­தற்கு என்­ன­வெல்­லாம் செய்ய வேண்­டுமோ என்­னென்ன வியூ­கங்­கள் வகுக்க வேண்­டுமோ அதன்­ப­டியே செயற்­பட்டு வரு­கி­றார்.

இத்­த­கைய பின்­ன­ணி­யி­லேயே எதிர்­வ­ரும் 6ஆம் திகதி நாடா­ளு­மன்­றில் நடை­பெ­ற­வுள்ள வாதப் பிர­தி­வா­தங்­க­ளை­யும் நோக்க முடி­கி­றது.

பிணை­முறி மோசடி தொடர்­பி­லும், மகிந்த காலத்து ஊழல் மோசடி தொடர்­பி­லும் விவா­திக்­கத் தயாரா என்று மைத்­திரி எழுப்­பிய சவாலை ஏற்­றுக்­கொண்­டுள்ள தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, நாடா­ளு­மன்­றத்­தைக் கூட்­டு­வ­தற்கு உத்­த­ர­விட்­டுள்­ளார்.

எனவே எதிர்­வ­ரும் 6ஆம் திகதி நாடா­ளு­மன்­றத்­தில் அனல் பறக்­கப்­போ­கும் வாதங்­க­ளும் அவற்­றுக்­கான பிர­தி­வா­தங்­க­ளும் நிகழ்­வது உறுதி. கடந்த சில தினங்­க­ளுக்கு முன்­னர் நிகழ்ந்­த­தைப் போன்ற கைக­லப்­புக்­கள் மீண்­டும் நிக­ழாது என்று கூறி­விட முடி­யா­துள்­ளது.

விவா­தத்­தின்­போது வெளிப்­ப­டுத்­தப்­ப­டும் கருத்­துக்­கள் சுதந்­தி­ரக் கட்­சியை பலப்­ப­டுத்­தவே வாய்ப்­புக்­கள் அதி­கம்.

ஆனால், ஊழ­லுக்கு எதி­ரான ஆட்சி என்­றும் தூய ஆட்சி என்­றும் தொடர்ந்து முழக்­கங்­களை எழுப்­பி­வ­ரும் மைத்­தி­ரி­பால சிறி­சேன, அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள ஊழல் பேர்­வ­ழி­க­ளுக்கு எதி­ரான என்ன நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ளார். எத்­தனை பேரை தண்­டித்துள்­ளார். என்ற கேள்வி மக்­க­ளின் மனங்­க­ளில் வலி­மை­யாக நிலை­பெற்­றுள்­ளது.

தூய ஆட்சி என்ற வெற்று கோஷத்­தைக் கைவிட்டு அத்­த­கைய ஆட்சி அமைப் பதற்கு, தான் இது­வரை மேற்­கொண்­டுள்ள (எதிர்­கா­லத் திட்­டங்­கள் அல்ல) நகர்­வு­கள் குறித்து அரச தலை­வர் தெளி­வு­ப­டுத்த வேண்­டும்.

கடந்த வரு­டத்­தின் இறு­திப்­ப­கு­தி­யில் ஊழல் வாதி­க­ளுக்கு எதி­ராக வாள் வீச்சு நடத்­தப்­ப­டும் என்­றெல்­லாம் அரச தலை­வர் முழங்­கி­யி­ருந்­தார்.

அவர் அவ்­வாறு தெரி­வித்து ஒரு மாதம் முழு­மை­யாக ஓடி மறைந்­து­விட்­டது. ஆனால் மைத்­தி­ரி­யின் வாள்­வீச்சு எவரை இலக்கு வைத்­தது என்­ப­தில் தெளி­வு­பெற முடி­யா­துள்­ளது. குறைந்­த­பட்­சம் எவ­ரை­யா­வது நெருக்­கிச் சென்­ற­தா­க­வும் தக­வ­லில்லை.

ஆக, வாக்­கு­க­ளைக் கைப்­பற்­று­தல், வாக்கு வங்­கி­க­ளைத் தக்­க­வைத்­தல் ஆகி­ய­வற்­றுக்­காக வெற்று வாக்­கு­று­தி­களை வழங்­கு­வ­தை­யும், பய­னற்ற முழக்­கங்­களை எழுப்­பு­வ­தை­யும் தவிர்த்து தூய ஆட்­சிக்­கான செயற்­திட்­டத்­தில் அரச தலை­வர் இறங்க வேண்­டும். தேர்­தல் முடிந்த பின்­ன­ரும்­கூட.