Home / செய்திகள் / உலக செய்திகள் / விமான நிறுவனம் வியாட்நாம் மக்களின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.

விமான நிறுவனம் வியாட்நாம் மக்களின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.

ஹனோய், ஜன.30- வியாட்நாம் நாட்டின் 23 வயதிற்குட்பட்ட கால்பந்து வீரர்களுடன், வியாட்ஜெட் என்ற விமானத்தில், உள்ளாடை அணிந்து மாடல் அழகிகள் பயணித்ததைத் தொடர்ந்து, அந்த விமான நிறுவனம் வியாட்நாம் மக்களின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.

தங்களின் விமான நிறுவனம் புகழ் பெற வேண்டும் என்ற எண்ணத்தில், தேசிய கால்பந்து குழுவின் 23 வயதிற்குட்பட்ட கால்பந்து விளையாட்டாளர்களுடன், உள்ளாடைகளை மட்டுமே அணிந்திருந்த அந்த மாடல் அழகிகளை பயணிக்க வைத்த அந்த விமான நிறுவனத்தை மக்கள் பலர் சாடினர்.

அதனைத் தொடர்ந்து, தவறான விளம்பர யுக்தியை கையாண்டதற்காக தாங்கள் வருந்துவதாக வியாட்ஜெட் நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்து, தன் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரியது.

“இது ஒரு கேவலமான, மிகவும் மோசமான விளம்பர மற்றும் வியாபார நோக்கமாகும். வியாட்ஜெட் நிறுவனம், இந்த மாதிரி செயலில் ஈடுபட்டது தவறு” என்று பல வியாட்னாமியர்கள் தங்களின் சமூக வலைத்தளங்களில் குறைப்பட்டுக் கொண்டனர்.

“உள்ளாடை மாடல் அழகிகளை, அந்த கால்பந்து வீரர்களுடன் ஒரே விமானத்தில் பறக்க விட்டது ஒரு தவறான செயலாகும். இது அருவருத்தக்க செயலாகும். இனிமேற்கொண்டு நாங்கள் வியாட்ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் பயணிக்க மாட்டோம்” என்றும் சிலர் கருத்து தெரிவித்திருந்தனர்.

அந்நாட்டின் 23 வயதிற்குட்பட்ட கால்பந்து குழு, கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் போட்டியில் உஸ்பெகிஸ்தானுடன் நேரிடையாக மோதி, 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

அந்தத் தோல்விக்குப் பின்னர், சீனாவிலிருந்து வியாட்நாம் நாட்டிற்கு திரும்பும் வேளையில், அந்த விமான நிறுவனம் இவ்வாறு நடந்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.